சுவிஸ் போதகரின் யாழ் வரவு தொடர்பில் விக்னேஸ்வரன் அடுக்கும் பரபரப்புக் குற்றச்சாட்டு

0

சுவிற்சர்லாந்தில் இருந்துவந்த பாதிரியார் யாழ்ப்பாணத்தில் பல தமிழ் மக்களுக்கு கொரோனா வைரஸின் தாக்கத்தைப் பகிர்ந்துவிட்டுப் பறந்து சென்றுவிட்டார் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்க்ள கொரோனாவின் பிடியில் சிக்கி மரணித்துள்ளமை கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் உள்ள தமிழ் மக்கள் இடையே கொரோனா வைரஸ் பல இழப்புக்களைக் கொண்டுவருவது பற்றி உங்கள் கருத்தைக் கூற முடியுமா என வாரம் ஒரு கேள்வியில் கேட்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், “எமது புலம்பெயர் உறவுகளில் 25 இற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளமை மனவேதனையை அளிக்கிறது. 

அத்துடன் பல்லாயிரக்கணக்கில் பல நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களாக தமிழர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழிலும் அடையாளம் கண்டுள்ளோம்.

சுவிற்சர்லாந்தில் இருந்துவந்த பாதிரியார் பல தமிழ் மக்களுக்கு கொரோனா வைரஸின் தாக்கத்தைப் பகிர்ந்துவிட்டுப் பறந்து சென்றுவிட்டார். 

அவரின் மத ரீதியான கூட்டத்திற்கு வந்தவர்களைத் தொற்றாளர்களாக்கி இன்று வடமாகாணம் நோய்த் தடுப்புக் காப்புப் பிரதேசமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் 35 வயதுடைய சீனப் பெண்ணொருவர் தென்கொரியாவுக்குச் சென்றார். அங்கு அவர் சிறு விபத்துக்கு உள்ளானார். 

மருத்துவர்கள் அவரின் காயங்களுக்குக் கட்டுப் போட்டுவிட்டு அவரின் இரத்தத்தைப் பரிசோதனை செய்ய விளைந்தபோது, தான் திடகாத்திரமாக இருப்பதாகக் கூறி பரிசோதனை செய்யாமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து கடந்த, பெப்ரவரி 9ஆம் திகதியும் 16ஆம் திகதியும் அவர் தென்கொரியாவில் தேவாலயம் ஒன்றிற்குச் சென்றார். அதன்பின்னர் ஒரு பெரிய விடுதியில் உணவருந்தினார்.

அவர் பின்னர் கொரோனாவால் பீடிக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த தேவாலயத்தில் மாத்திரம் 12 ஆயிரம் பேருக்கு அவர் தொற்றைக் கொடுத்திருந்தார். விடுதியிலும் அவரால் பலர் தொற்றுக்கு உள்ளானார்கள்.

தென்கொரியாவில் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்ட சுமார் 9 ஆயிரம் பேரில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர், அதாவது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஒரு நோயாளியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டுபிடித்துள்ளார்கள். அப்பெண்ணை தென்கொரிய நோயாளி இலக்கம் 31 என்று அழைக்கின்றார்கள்.

எனவே இந்த நோயின் பரவல் மிகவும் ஆபத்தானது. பத்து நாட்களுக்கு மேல் சுகதேகிகளாக இருந்துவிட்டு திடீரென்று நோய்க்கு ஆளாவார்கள் அந்த சுகதேகிகள்.

எமது தமிழ் புலம்பெயர் உறவுகள் குறிப்பிட்ட காலத்தின்போது தம்மைத் தனிமைப்படுத்தி வைக்கவேண்டிய அவசியத்தை நோயாளி 31இன் கதை வலியுறுத்துகின்றது.

தமிழ் ஈழப் போராட்டத்தின் போது இலட்சக் கணக்கான எம்மவரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. இங்கிருந்து ஏற்கனவே எழுந்து சென்றவர்களும் எஞ்சியிருந்தவர்களுள் ஏதிலிகளாகப் புலம்பெயர்ந்தவர்களும் இன்று அந்தந்த நாடுகளில் கொரோனா வைரஸ் என்ற ஒரு புதிய கண்ணுக்குப் புலப்படாத அரக்கனுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது புலம் பெயர் உறவுகளின் உழைப்பும் விடுதலை செயற்பாடுகளும் எந்த அளவுக்கு வடகிழக்கு மக்களிடையே வேரூன்றி இருக்கின்றன என்பது தெரியாத ஒன்றல்ல. எமது தமிழ் அரசியல் கட்சிகளை உள்நாட்டு கொடையாளர்களிலும் பார்க்க புலம்பெயர் உறவுகளே நிதி கொடுத்து நிமிர்த்தி வைத்திருக்கின்றனர்.

அவர்களின் இழப்பு இங்குள்ள எம்மக்களின் இழப்பே என்று ஊகிப்பதற்கு வெகு நேரம் தேவையில்லை. புலம் பெயர்ந்தோர் இழப்பு எமது தமிழ் தேசத்தின் இழப்பு.

இந்நிலையில், தற்போதைய நெருக்கடி நிலையைச் சமாளிப்பதும் வருங்கால வாழ்வைப் புதிதாக வழி அமைத்தலுமே தற்போதைய எமது தலையாய கடன்கள்.

‘நாம் போமளவும் இட்டு உண்டு இரும்’ என்று ஒளவையார் கூறியது போல் நாமும் எமது உறவுகளும் கொரோனா வைரஸ் போமளவும் முடியுமானால் மற்றையோருக்கு இட்டு நாம் வீட்டில் இருந்து உண்டு, கொரோனாவின் வெளிப் பயணத்தைத் துரிதப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here