வெளிநாடுகளில் பணிபுரியும் சகோதரர்களின் சுகத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் துஆ செய்யுங்கள்..!

0

எமது சமூகம் வறுமையின் கொடுமையிலிருந்து  ஓரளவு 
சமாளித்துக்கொள்ள முடிகிறது என்றால் அதன் பெரும் பகுதிக்கு காரணம் வெளிநாடுகளில் பணிபுரியும் எமது சகோதர உறவுகள்தான். 

பாடசாலைகளின் தேவைகளில் பங்களித்தல் , மதரசாக்களின் வளர்ச்சியில் உறுதுணையாய் இருத்தல் , ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்குதல் , தனியார் அமைப்புக்களின் திட்டங்களின் ஊடாக சமூக மாற்றத்தில் மும்முரமாய் ஈடுபடுதல் என்று எண்ணற்ற உதவிகளை வழங்கி எம்மை தலை நிமிர்ந்து வாழ வைத்ததில் பெரும் பங்கு வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் என்பது மறக்கவோ , மறுக்கவோ முடியாத  உண்மை.

உறவுகளைப்பிரிந்து தனிமை என்ற அவஸ்தையோடு , மிகக்கடினமான  வேலைகளில் ஈடுபட்டாலும் தம் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை மிச்சப்படுத்தி சமூகத்தின் பங்கு என்று வழங்கியவர்கள் இன்று எண்ணற்ற பல சிரமங்களை அனுபவிப்பதானது மனதை கஷ்டப்படுத்துகின்றது.

சரியான உணவில்லாமல் , சம்பளங்களில் குறைபாடுகளோடு , அவசரமான  அவசியமான தேவைகளுக்கு கூட சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல்  தாய் தந்தையரைப்பிரிந்து , மனைவி மக்களைப்பிரிந்து ஏக்கங்களைச்சுமந்து 
குடும்ப உறவுகளிடம் கவலைகளை மறைத்து தம் முகத்தில் போலியாய் சந்தோசத்தை வரவைத்து பேசிப்பழக வேண்டிய சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அண்மையில் பெறப்பட்ட  தரவுகளின் அடிப்படையில் வெளிநாடுகளில் தொழில்புரியும் குறிப்பிடும் எண்ணிக்கையிலான எமது சகோதரர்கள் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற கவலையான செய்தி மனதை வாட்டி வதைக்கின்றது.

தாய் தந்தைக்கு , மனைவி பிள்ளைகளுக்கு இதனைச்சொல்லி அவர்களையும் கஷ்டப்படுத்தக்கூடாது என்று  தமக்குள்ளே தம் வலிகளோடு கொரோனவையும்  மறைத்து வைத்துக்கொண்டு உள்ளூர அழுதுகொண்டிருக்கும் எமது உறவுகளை நினைக்க மனது அவஸ்தைப்படுகின்றது. அவர்களுக்காக எங்களின் கரங்களை ஏந்த வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது !

அவர்களின் சுகத்துக்காகவும் , பாதுகாப்புக்காகவும் துவா செய்யவேண்டியது ஒவ்வொரு உலமாவினதும் , ஒவ்வொரு ஹாபிழுடையதும் , ஒவ்வொரு பட்டதாரியுடையதும் , ஒவ்வொரு அதிகாரியுடையதும், ஒவ்வொரு முஸ்லீமினுடையதும் கடமையாகும். ஏனெனில் அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த அந்த பணத்தின் பங்களிப்பு ஏதாவது ஒரு வகையில்  எங்கள் வளர்ச்சியில் இருந்தேயிருந்தது இன்னும் இருந்து கொண்டே இருக்கும் .

ஆறுதலுக்கு ஆள் இல்லாத போது மனிதன் இடிந்து போய் விடுகின்றான். எனவே வெளிநாடுகளில் வாழும் நண்பர்களே உங்கள் நண்பர்கள் விடயத்தில் அக்கரையோடும் , கருணையோடும் நடந்துகொள்ளுங்கள். நீங்களே ஒருவருக்கொருவர் உதவியும் ஒத்தாசையுமாய் இருந்துகொள்ளுங்கள். 

ஆறுதலும், நம்பிக்கை ஊட்டலும் நோய் சுகப்படுதலில் மிகப்பெரும் பங்களிப்பையாற்றும் உங்கள் நண்பர்களை தொடர்ச்சியாக நலம் விசாரித்துக் கொள்ளுங்கள்.

மருத்துவ ஆலோசனை பெறுவது மிகமுக்கியமானது , அதை சரிவர பின்பற்றுவது மிக மிக அவசியமானது. 
உங்கள் நண்பர்கள் விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து அவர்கள் ஏதாவது நோய் அறிகுறிகளுக்கு உள்ளானால் அவர்களை வைத்திய ஆலோசனை பெறுவதற்கு எப்போதும் அறிவுறுத்துங்கள் , அவர்களை தொடர்ச்சியாக கண்காணியுங்கள்.
அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்குங்கள்.

நோய் ஏற்படாமல் தவிர்க்கக்கூடிய முறைகளை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடியுங்கள்.

எம் அனைவரையும் இறைவன் பாதுகாக்க வேண்டியவனாய் ,
உங்கள் சகோதரன்
Dr.MB ஹாலித்

Source:Madawala News

Leave a reply

Please enter your comment!
Please enter your name here