COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 4 மீட்டர் தூரம் வரை கிருமிகள் பரவலாம்

0

COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிருமிகள் 4 மீட்டர் தூரம் வரை பரவலாம் என்று மருத்துவமனைகளில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தற்போது கடைப்பிடிக்கப்படும் 1 மீட்டர் பாதுகாப்பு இடைவெளியைக் காட்டிலும் அது மூன்று மடங்கு அதிகம்.

அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டுத் தடுப்பு நிலையம் வெளியிடும் சஞ்சிகையில், சீன ஆய்வாளர்களின் அந்தக் கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டது.

கிருமி எப்படிப் பரவுகிறது என்பது குறித்த விவாதத்தை, இந்தக் கண்டுபிடிப்பு மேலும் சிக்கலாக்கி இருக்கிறது.

4 மீட்டர் தூரத்துக்கு ஓரளவு கிருமிகள் இருந்தாலும் அவை தொற்றும் வாய்ப்புக் குறைவே என்பதை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தினர்.

வூஹான் நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில், 24 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், நோயாளிகள் தும்மினாலோ இருமினாலோ கிருமி நிறைந்த நீர்த் திவலைகள், புவி ஈர்ப்பு விசை காரணமாகப் பெரும்பாலும் தரையிலேயே விழுந்து படிவதாகத் தெரியவந்தது.

ஆனால், காற்றில் மிதக்கும் கிருமித் துளிகள் 4 மீட்டர் தொலைவு வரை கலந்து விடுகின்றன.

அதுவும், நோயாளி தும்மும் முன்பகுதியிலேயே அதிகமான கிருமிகள் அடையாளம் காணப்பட்டன.

நோயாளியின் பின்புறத்தில் கிருமி அதிகத் தொலைவுக்குச் செல்வதில்லை.

கிருமிகளைக் கொண்ட நுண்ணிய நீர்த் திவலைகள், குறிப்பிட்ட நேரத்திற்கு காற்றில் கலந்திருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் 2 மீட்டர் தூரத்திற்கு அப்பால் கிருமிகள் காற்றில் கலந்திருக்கும் அளவு கணிசமாய்க் குறைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவ ஊழியர்களின் காலணிகளின் அடிப்புறத்திலும் கிருமிகள் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டன.

நோய்ப்பரவலுக்கு அதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் தக்க பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றியதால், ஆய்வு நடத்தப்பட்ட மருத்துவமனையில் ஊழியர்களுக்குக் கிருமி பரவவில்லை.

கிருமிகள் பரவும் தூரத்தைக் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதை ஆதரிக்கவில்லை.

சுற்றுச்சூழலில் பரவும் கிருமியால், வீட்டில் பாதுகாப்பு ஆடை அணியாத மற்றவர்களுக்கு, கிருமி எளிதில் பரவும் என்பதை அவர்கள் சுட்டினர். 

Leave a reply

Please enter your comment!
Please enter your name here