COVID-19: மலேசியா நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது

0

மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அதனை அறிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால் மலேசியாவில் COVID-19 கிருமிப் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் அன்றாட எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், மேலும் இரண்டு வாரங்கள் நடமாட்டக் கட்டுப்பாடு நடப்பில் இருந்தால் கிருமிப்பரவலை மேலும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று திரு. முஹிதீன் கூறினார்.

கிருமித்தொற்று உறுதியானவர்களின் விகிதம் 7 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளதாக அவர் சொன்னார். அந்த விகிதம், உலகச் சுகாதார நிறுவனம் தீர்மானித்துள்ள 10 விழுக்காட்டை விடக் குறைவு என்பதை மலேசியப் பிரதமர் சுட்டினார்.

மலேசியாவில் இரண்டாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 18ஆம் தேதி முதல் மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் உள்ளது.

தற்போது மலேசியாவில் 4,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 60க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

கோவிட்-19 கிருமிக்கு எதிரான போரில் மலேசியா இன்னமும் வெற்றி பெற்றுவிடவில்லை என்று சில நாள்களுக்கு முன், மலேசிய சுகாதாரத் துறை குறிப்பிட்டிருந்தது.

அதேவேளையில், தோற்றுப்போய் விடவும் இல்லை என அது தெரிவித்திருந்தது. 

Leave a reply

Please enter your comment!
Please enter your name here