இரு வங்காளதேசத்தவர்கள் சிங்கப்பூரில் கொள்ளைச் சம்பவத்தில் கைது!
கடந்த பிப்ரவரி 25-ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் கெய்லாங், லோரோங் 13 மற்றும் லோரோங் 15 இடையே உள்ள ஒரு பின்சந்தில் இரு வங்காளதேச நாட்டவர்கள் ஒருவரைத் தாக்கி 300 டாலர் பணத்தை கொள்ளையடித்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது காயங்கள் குறித்த விவரங்கள் காவல்துறையால் வெளியிடப்படவில்லை.
தாக்குதலுக்கு உள்ளானவர்களை மியா ஷாவான் (28) மற்றும் அஹமத் முகமது ரியாஸ் (29) என்று அடையாளம் கண்டு பிப்ரவரி 26-ம் தேதி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். ஏற்கனவே, 2023-ம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் கடத்தல் சிகரெட்டுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை மியாவும், போதைப்பொருள் குற்றம் மற்றும் குற்ற நடவடிக்கைகளில் இருந்து பயனடைந்ததற்காக அஹமத்தும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்தனர். ஜாமீனில் இருந்த நிலையிலும் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மியாவின் விசாரணைக்கு முந்தைய மாநாடு பிப்ரவரி 28-ம் தேதியும், அகமத்தின் மாநாடு மார்ச் 1-ம் தேதியிலும் நடைபெற உள்ளது.
கொள்ளை மற்றும் காயத்துடன் தொடர்புடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம். சமீபத்திய வாரங்களில் வங்கதேச ஆண்கள் தொடர்புடைய இது இரண்டாவது கொள்ளைச் சம்பவமாகும். இது போன்ற குற்றங்களைப் பற்றிய கவலைகளை இது மேலும் அதிகரிக்கிறது. கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி கல்லாங்கில் உள்ள மெர்டேகா பாலத்தின் அடிவாரத்தில் ஒருவரை தாக்கி பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்ததற்காக ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.