கடல் எரிவாயு எண்ணெய் சட்டவிரோத விற்பனையில்15 பேர் கைது!

0

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக கடல் எரிபொருள் விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பதினைந்து பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களில், எட்டு பேர் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட இழுவைப் படகின் பணியாளர்கள். மீதமுள்ள ஏழு பேர் வெளிநாட்டுப் பதிவுபெற்ற இழுவைப் படகைச் சேர்ந்தவர்கள். இந்த சட்டவிரோத பரிவர்த்தனை துவாஸ் கடற்கரையில் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆரம்பகட்ட விசாரணையில், சிங்கப்பூர் இழுவைப்படகு பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தின் அனுமதியின்றி கடல் எரிபொருளை வெளிநாட்டு இழுவைப் படகின் பணியாளர்களுக்கு விற்றிருக்கலாம் என்று தெரியவருகிறது. சம்பவத்தில், இழுவைப் படகை போலீசார் பறிமுதல் செய்ததுடன் S$8,200 (US$6,090) ரொக்கத்தையும் ஆதாரமாக கைப்பற்றியுள்ளனர். இரண்டு இழுவைப் படகுகளின் பணியாளர்களும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.

சிங்கப்பூர் இழுவைப் படகு பணியாளர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், நம்பிக்கை மோசடி செய்ததற்காக 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். அதேவேளை, வெளிநாட்டு இழுவைப் படகின் பணியாளர்களுக்கு திருட்டுச் சொத்தை வாங்கியதற்காக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க அதிகாரிகள் உறுதிபூண்டுள்ளதாக வலியுறுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.