சிங்கப்பூரில் பிறந்த ராட்சத பாண்டா குட்டி ‘லே லே’ சீனாவில் அறிமுகமாகிறது!
சிங்கப்பூரில் பிறந்து தற்போது சீனாவில் வசிக்கும் ராட்சத பாண்டா குட்டி, ‘லே லே,’ கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்கு வந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மூன்று வயதை நிறைவு செய்ய உள்ள லே லே, சிச்சுவான் மாகாணத்தில் உள்ள துஜியாங்கியான் பாண்டா தளத்தில் தனது புதிய வீட்டை ஆராய்ந்து கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
செங்க்டுவில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் தூதரக நாயகம் ஜோயல் டேன் பகிர்ந்து கொண்ட வீடியோவில், லே லே நன்றாகவே பழகிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
லே லே தனது இருப்பிடத்திலிருந்து எச்சரிக்கையுடன் வெளியே வந்து புதிய சூழலைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதைக் காணொளி படம் பிடித்துள்ளது.
வோலாங் பாண்டா ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ‘கிங்ஸாய்’ மற்றும் ‘கிங்பாவோ’ என்ற சக பாண்டா குட்டிகளுடன் லே லே தன் இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
லே லேயின் அன்றாட உணவில் 25 கிலோ மூங்கில் இலைகள், 5 கிலோ மூங்கில் தளிர்கள், 1 கிலோ கேரட் மற்றும் 1 கிலோ உணவு கேக் ஆகியவை அடங்குகின்றன (இந்த உணவை ‘வோவோடூ’ என்பர். சோளம், அரிசி மற்றும் சோயா பீன்ஸால் செய்யப்படும் இந்தக் கேக் பாண்டாக்களுக்கு மிகவும் பிடிக்கும்).
இணையவாசிகள் லே லேயின் மீதான அன்பையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் அவரை இங்கு காணாமல் ஏங்குவதாகவும், புதிய பாண்டா நண்பர்களுடன் நன்றாகப் பழக வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
‘வைபோ’வில் பகிரப்பட்ட மற்றொரு வீடியோவில், லே லே, ‘கிங்ஸாய்’ உடன் மகிழ்ச்சியாக விளையாடுவதைக் காண முடிகிறது.
உடல் முழுவதும் இலைகள் படர்ந்திருக்க, இருவரும் குறும்போடு இருக்கின்றனர்! இதைப் போலவே கிங்பாவோவுடனும் லே லே ஒரு நட்பை வளர்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது.
image the straits times