52 வயது நபருக்கு அடுத்தடுத்து குற்றங்களுக்காக சிறை தண்டனை!
ஜூ ஹெகியு (Zhou Heqiu) என்ற 52 வயது நபர், கார்களில் மனிதக்கழிவை பூசியது மற்றும் விபத்து ஏற்படுத்தி ஒருவரின் மரணத்திற்கு காரணமானது உள்ளிட்ட பல குற்றங்களுக்காக 11 மாதங்கள் மற்றும் மூன்று வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிறரை துன்புறுத்துவதைத் தடுத்தல் சட்டம், ஆயுதம் வைத்திருத்தல் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டார்.
டெல்டா சாலை மற்றும் ஜாலான் புக்கிட் மெரா சந்திப்பில், 2021 ஆகஸ்ட் 31 அன்று மாலை 6 மணியளவில் அவர் லாரி ஓட்டும்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மோதியதில் விபத்து ஏற்பட்டது.
அதில் பின்னால் பயணித்த 24 வயது பெண் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.
விபத்து நடந்த நேரத்தில் டெலிவரி ரசீதை சரிபார்க்க முயன்றதால் அவர் கவனம் சிதறியதாக தெரிகிறது.
இந்த மோதலில் ஓட்டுநரும், பின் இருக்கையில் பயணித்தவரும் லாரியில் அடிபட்டு இழுத்துச்செல்லப்பட்டனர்.
இதில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்தார். மேலும், ஜூவிடம் கத்தி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு முன் தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
விபத்திற்காக இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டபோது, 2023 டிசம்பரில் பணப் பிரச்சனைக்குப் பழிவாங்கும் விதமாக அண்டை வீட்டுக்காரரின் காரில் மனிதக் கழிவை பூசியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த சம்பவத்தோடு தொடர்புபடுத்தி விசாரித்தபோது, நவம்பர் 2023-லும் தவறாக அடையாளம் கண்டு, வேறு ஒரு காரில் மனிதக்கழிவை பூசியதை ஒப்புக்கொண்டார்.
இரு சம்பவங்களுக்காகவும் கைது செய்து குற்றம் சாட்டப்பட்டார். சிறை தண்டனையுடன், ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை இழந்துள்ளார்.