சிங்கப்பூரில் அதிரடி போதைப்பொருள் சோதனை S$128,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்மூவர் கைது!
ஆகஸ்ட் 14 அன்று சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) நடத்திய அதிரடிச் சோதனைகளில் மூன்று சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டனர்.
டம்பைன்ஸ், புக்கிட் பாடோக் மற்றும் ஜாலான் காயு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனைகளில் மொத்தம் சுமார் $128,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் 1,050 கிராம் மெத்தாம்பேட்டமைன் (ஐஸ்), 100 எருமின்-5 மாத்திரைகள், 9 கிராம் எக்ஸ்டஸி மற்றும் பல்வேறு போதைப்பொருள் உபகரணங்கள் அடங்கும்.
டம்பைன்ஸில், 42 வயது மதிக்கத்தக்க ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது காபி மேசையின் கீழ் போதைப்பொருள் உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
புக்கிட் பாடோக் வெஸ்ட் அவென்யூ 9-ல், நான்கு குழந்தைகளின் தந்தையான 36 வயது நபர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது மனைவியும், ஒன்று முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளும் வீட்டில் இருந்தனர்.
அங்கிருந்து சுமார் 892 கிராம் ஐஸ் மற்றும் 100 எருமின்-5 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜாலான் காயுவில், 41 வயது மதிக்கத்தக்க நபரின் வீட்டில் 158 கிராம் ஐஸ் மற்றும் 9 கிராம் எக்ஸ்டஸி கண்டெடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் சட்டப்படி, 250 கிராம் அல்லது அதற்கு மேல் மெத்தாம்பேட்டமைன் கடத்தியவர்கள் மரண தண்டனைக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. தற்போது இந்த மூன்று வழக்குகளும் தீவிர விசாரணையில் உள்ளன.