ஈஸ்ட் கோஸ்ட் பார்க் சாலையில் பைக் சாகசம் டிக்டாக் வீடியோவால் சிக்கிய 20 வயது இளைஞர்!
ஈஸ்ட் கோஸ்ட் பார்க் சேவை சாலையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாகக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) கைது செய்யப்பட்டார்.
பேருந்து நிறுத்தம் அருகே இருவர் நடைபாதையில் பைக் ஓட்டுவதும், அங்குள்ள போக்குவரத்து போலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சிப்பதும் போன்ற காட்சிகள் டிக்டாக் காணொளி ஒன்றில் வெளியானது.
இது குறித்து போலிஸார் கூறுகையில், போக்குவரத்து அதிகாரிகள் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வாகன நிறுத்துமிடம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சிலர் குழுவாக இருந்ததைக் கண்டனர்.
பின்னர் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியதில், அந்த 20 வயது இளைஞர் அந்தப் பகுதியில் பைக் ஓட்டியது தெரியவந்தது.
இதையடுத்து, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல் முறை குற்றம் செய்பவர்களுக்கு 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது $5,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது.