சிங்கப்பூரில் கஞ்சா கலந்த வேப் மற்றும் சாக்லேட் வைத்திருந்த ஆடவர் கைது!
சிங்கப்பூரின் பிரபலமான மெரினா ஒன் ரெசிடென்சஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில், 35 வயது அமெரிக்கர் ஒருவர் போதைப்பொருட்களுடன் பிடிபட்டுள்ளார்.
அவரிடமிருந்து கஞ்சா கலக்கப்பட்ட வேப் கருவியும், போதையைத் தரும் காளானில் இருந்து தயாரிக்கப்பட்ட சாக்லேட்டும் கைப்பற்றப்பட்டன.
ஹார்டிங் சிட்டி ஹரோல்ட் ஐவன் என்ற அந்த நபர் மீது, கடந்த செப்டம்பர் 15 அன்று ஆறு போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கடந்த ஏப்ரல் 16 அன்று அவரது வீட்டில் இந்தச் சோதனை நடந்துள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் ஏப்ரல் 16 அல்லது அதற்கு முன்பே கஞ்சா பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, அவர் ஒன்பது வேப் கருவிகளை வாங்க முயன்றதாகவும், அவற்றில் ஆறு கருவிகளில் கஞ்சா இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு அக்டோபர் 13 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், $20,000 வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வேப் தொடர்பான குற்றங்கள் குறித்து பொதுமக்கள் சுகாதார அறிவியல் ஆணையத்தின் (Health Sciences Authority) உதவி எண்ணிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ புகாரளிக்கலாம் என அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.