சிங்கப்பூரில் போலி ஆர்டர் மோசடி 22 வயதான இலங்கை மாணவி கைது!
சிங்கப்பூரில் உள்ளூர் வியாபாரிகளைக் குறிவைத்து நடந்த போலி ‘பல்க் ஆர்டர்’ மோசடிகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் 22 வயதான இலங்கை மாணவி, ரஜாதி ராஜசிங்கே மீது இன்று (செப். 17) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தனது வங்கிக் கணக்கு மற்றும் அதன் உள்நுழைவு விவரங்களை மோசடிக் கும்பலுக்குப் பயன்படுத்தக் கொடுத்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வங்கிக் கணக்குகள் மூலம் பெரிய தொகைகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள இவர், அக்டோபர் 1 ஆம் தேதி தனது குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இவரும் ஒருவர் என காவல்துறை தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் ராணுவ (SAF) அதிகாரிகள் போல் நடித்து, உணவகங்களிடமிருந்து பெரிய அளவில் உணவு மற்றும் பானங்களுக்கு ஆர்டர் கொடுப்பதாக இந்தக் கும்பல் ஏமாற்றியுள்ளது.
செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் இதுவரை குறைந்தது ஐந்து புகார்கள் வந்துள்ளதாகவும், இதில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் $32,000 வரை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சோதனையின்போது, பல மின்னணு சாதனங்கள் மற்றும் ப்ரீ-பெய்ட் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மோசடி பொதுவாக எப்படி நடக்கும் என்றால், முதலில் போலியான வாடிக்கையாளர்கள் பெரிய ஆர்டர்களைக் கேட்பார்கள். பின்னர், அவர்கள் பரிந்துரைக்கும் ஒரு ‘சப்ளையரிடம்’ பணம் செலுத்துமாறு கூறுவார்கள். ஆனால், அந்த சப்ளையரும் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்தான். வியாபாரிகள் அந்த சப்ளையருக்குப் பணம் செலுத்திய பிறகு, ஆர்டர் கொடுத்த வாடிக்கையாளரும், அந்த சப்ளையரும் தலைமறைவாகி விடுவார்கள்.
எனவே, இதுபோன்ற பெரிய ஆர்டர்கள் வரும்போது, நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், பணம் செலுத்துவதற்கு முன் ஆர்டரை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் காவல்துறையும் தற்காப்பு அமைச்சும் அறிவுறுத்தியுள்ளன.