அப்பர் சாங்கியில் உள்ள கட்டுமான தளத்தில் சுவர் இடிந்துவீழ்ந்ததினால் 52 வயது தொழிலாளி உயிரிழப்பு!
அப்பர் சாங்கியில் தனியார் வீடு கட்டும் இடத்தில் நடந்த ஒரு துயர சம்பவத்தில், 52 வயது கட்டுமான ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செப்டம்பர் 17 அன்று, அவர் ஒரு சுவருக்கு அருகில் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தபோது, அந்தச் சுவர் திடீரென இடிந்து அவர் மீது விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட அவரை மீட்க மீட்புக் குழுவினர் கடுமையாகப் போராடினர். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு (MOM) விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், அந்த இடத்தில் அனைத்து வேலைகளையும் உடனடியாக நிறுத்தியுள்ளது.
உயிரிழந்த ஊழியர், தனியார் வீடுகளைக் கட்டும் ‘நிக் & வெஸ்’ (Nic & Wes) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இது ஒரு விபத்துதான் என்றும், இதில் வேறு எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை என்றும் காவல்துறை உறுதி செய்துள்ளது.
கட்டட, கட்டுமான ஆணையம் (BCA) கூறுகையில், விபத்து நடந்த இடத்தில் குழாய்கள் பதிக்கும் வேலை நடந்தபோது சுவர் இடிந்து விழுந்ததாகத் தெரிவித்தது. பொறியாளர்கள் நடத்திய ஆய்வில், அருகிலுள்ள மற்ற கட்டடங்களுக்கு எந்தவித உடனடி ஆபத்தும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு ஆணையம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டது.