சிங்கப்பூர் மோசடிக் கும்பலுக்கு$441,000 வசூலிக்க உதவிய மலேசியர் 31வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு!
சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த மோசடிக் கும்பலுக்கு உதவியதாக, 31 வயது மலேசிய ஆடவர் மீது இன்று (செப்டம்பர் 18) குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லீ ஜியான் செங் என்ற அந்த நபர், அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றும் கும்பலுக்காக $441,000-க்கும் அதிகமான பணத்தை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் நடந்துள்ளது. இந்த வழக்கு செப்டம்பர் 25 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த மோசடிக் கும்பல் எப்படிச் செயல்பட்டது என்பது குறித்தும் காவல்துறை விளக்கியுள்ளது. சிங்கப்பூர் நாணய ஆணையத்திலிருந்து (Monetary Authority of Singapore) பேசுவதாகக் கூறி, பொதுமக்களைத் தொலைபேசியில் அழைப்பார்கள். பின்னர், “உங்கள் வங்கிக் கணக்குகள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன” அல்லது “உங்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டுவிட்டன” என்று கூறி அவர்களைப் பயமுறுத்துவார்கள்.
இதை நம்பும் அப்பாவி மக்கள், அவர்கள் சொல்லும் நபரிடம் பணத்தை நேரில் கொடுக்குமாறும் அல்லது குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றுமாறும் கேட்கப்படுவார்கள். பணத்தைக் கொடுத்த பிறகுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்வார்கள்.
இந்த வழக்கில் தொடர்புடைய லீ, கடந்த செப்டம்பர் 16 அன்று மலேசியாவில் கைது செய்யப்பட்டு, அடுத்த நாள் சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்கிடையே, இதேபோன்ற மற்றொரு வெளிநாட்டு மோசடிக் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் மேலும் 15 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.