சிங்கப்பூரில் போலீசாரைக் கடிக்க முயன்ற நபர் கைது! கையில் சிக்கிய போதைப்பொருள்!
சிங்கப்பூரில் உள்ள யூபி அவென்யூ 3 பகுதியில், கடந்த செப்டம்பர் 20 அன்று 41 வயது நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின்போது, அவர் தனது அடையாளத்தை மாற்றிச் சொல்லியுள்ளார். பின்னர் அவரைச் சோதனையிட்டதில், அவரிடமிருந்து போதைப்பொருட்கள், போதைப்பொருள் பயன்படுத்தும் கருவிகள், ஒரு மின்-சிகரெட் (e-vaporiser) மற்றும் அவருக்குச் சொந்தமில்லாத ஒரு வங்கி அட்டை (bank card) ஆகியவை கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்படும்போது அந்த நபர் மேலாடை அணியாமல், கையில் ஒரு நாயுடன் இருந்துள்ளார். போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க அவர் கடுமையாகப் போராடியுள்ளார். அப்போது, போலீசாரைத் தள்ளிவிட்டது மட்டுமல்லாமல், அவர்களைக் கடிக்கவும் முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், போலீசார் அவரைப் போராடி அடக்கிக் கைது செய்ய வேண்டியிருந்தது.
பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், அவர் ஏற்கனவே மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் (CNB) தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்தது.
தற்போது அவர் மீது போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், காவலர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்துத் தாக்கியது, தவறான தகவல் கொடுத்தது மற்றும் பிறருக்குச் சொந்தமான பொருளை வைத்திருந்தது எனப் பல பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.