சிங்கப்பூரின் புதிய ஜூரோங் ரயில் அதிநவீன சேவை 2027-ல்.
சிங்கப்பூரின் புத்தம் புதிய ஜூரோங் ரயில் பாதைக்காக (JRL) உருவாக்கப்பட்ட முதல் ரயில், தென் கொரியாவிலிருந்து சிங்கப்பூரை வந்தடைந்துள்ளது.
இந்த ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு, தெங்கா பணிமனையில் முழுமையாகச் சோதனை செய்யப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.
ரயிலின் சிறப்பம்சங்கள் என்ன?
மொத்தமாக இந்தத் தடத்திற்காக 62 அதிநவீன தானியங்கி ரயில்கள் வரவிருக்கின்றன.
ஒவ்வொரு ரயிலும் மூன்று பெட்டிகளைக் கொண்டிருக்கும். எதிர்காலத்தில் தேவைப்பட்டால், இதனை நான்கு பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. மீதமுள்ள அனைத்து ரயில்களும் 2028-ஆம் ஆண்டுக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில் பாதையில் உள்ள கூர்மையான வளைவுகளில் சுலபமாகப் பயணிக்க, ரயிலின் பெட்டிகள் சற்று சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, சக்கர நாற்காலிகள் மற்றும் குழந்தைகளின் தள்ளுவண்டிகள் எளிதாக உள்ளே சென்று வர வசதியாகக் கதவுகள் அகலமாகவும், உள்ளே அதிக இடவசதியும் செய்யப்பட்டுள்ளது.
எப்போது சேவை தொடங்கும்?
இந்த புதிய ஜூரோங் ரயில் சேவையானது 2027 முதல் 2029-ஆம் ஆண்டுக்குள் படிப்படியாகத் தொடங்கப்படும். இது குறித்த மேலதிக தகவல்கள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.