தம்பினிஸ் மாடிக் குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட மின்-சிகரெட்டுகள் கண்டுபிடிப்பு!
சிங்கப்பூர், தம்பினிஸ் பகுதியில் உள்ள ஒரு மாடிக் கட்டிடத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவர், 100-க்கும் மேற்பட்ட மின்-சிகரெட்டுகளை (e-vaporisers) கண்டுபிடித்தார். இந்தச் சம்பவம் நவம்பர் 11 ஆம் தேதி நடந்துள்ளது.
பிளாக் 494D, தம்பினிஸ் தெரு 43-இல் உள்ள அந்தக் கட்டிடத்தின் ‘மின் அறை’ (electrical riser) அருகே, ஒரு பையிலும் (trolley bag) ஒரு நெகிழிப் பையிலும் இந்தப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
சுமார் அதிகாலை 5 மணியளவில், அந்தத் துப்புரவுத் தொழிலாளி இதைக் கண்டதும், உடனடியாக அருகில் இருந்த செய்தித்தாள் விற்பனையாளரான திரு. ஹுவாங் யோங் சாய் என்பவருக்குத் தகவல் கொடுத்தார்.
70 வயதான திரு. ஹுவாங், அந்த இடத்திற்குத் நேரில் சென்று பார்த்தார். அங்கே மின்-சிகரெட்டுகள் நிரப்பப்பட்ட பல பெட்டிகள் இருப்பதை அவர் கண்டார். உடனே, அந்தப் பைகளைத் தனது செய்தித்தாள் கடைக்கு எடுத்துச் சென்று, போலீசுக்குத் தகவல் தெரிவித்தார்.
அவர் கூறியதன்படி, அந்த பையில் எட்டுப் பெட்டிகள் இருந்தன, ஒவ்வொன்றிலும் 10 மின்-சிகரெட்டுகள் இருந்துள்ளன.
சுமார் காலை 9 மணியளவில், போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து, அந்த மின்-சிகரெட்டுகளை விசாரணைக்காகக் கைப்பற்றிச் சென்றனர்.
இந்தப் பகுதியில் இதுபோன்று தடைசெய்யப்பட்ட பொருட்கள் கிடைப்பது இது முதல் முறையல்ல என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பும், அந்தத் துப்புரவுத் தொழிலாளி இதுபோல மின்-சிகரெட்டுகள் இருந்த மற்றொரு பையைக் கண்டெடுத்து, அதை அப்புறப்படுத்தியுள்ளார்.
சுகாதார அறிவியல் ஆணையம் (HSA), இந்தச் சம்பவம் குறித்து போலீசாருடன் இணைந்து விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.