மேலகாவில் வடக்கு-தெற்கு அதிவேக சாலையில் பஸ் விபத்தில் இந்திய சுற்றுலாப் பயணி மரணம், இருவர் காயம்
மலேசியாவில் வடக்கு-தெற்கு அதிவேக சாலையில் மோதியதில் பஸ் தீப்பிடித்ததில் இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான சம்பவம் மெலகாவில் இடம்பெற்றுள்ளது.
ஜனவரி 13 ஆம் தேதி அதிகாலை 3:50 மணியளவில் நடந்த விபத்தின் போது 17 வயதான யாஃபாரா தாஜ் ஃபக்ருதீன் ஹுசைனி, எரியும் பஸ்ஸில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக பலியானார். அலோர் காஜா மாவட்ட காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர் அர்ஷத் அபு, பலத்த காயமடைந்த பயணிகளை இந்தியாவின் தமிழ்நாடு, களக்காடு நகராட்சியைச் சேர்ந்த 69 வயதான பீர் முகமது கண்ணுதீன் மற்றும் சென்னையைச் சேர்ந்த 45 வயதான அனிசா பேகம் ஃபக்ருதீன் ஹுசைனி என்று அடையாளம் காட்டினார்.
மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் அனிசா பேகத்துக்கு சிறிய தீக்காயம் ஏற்பட்டது. மேலும் இரு பயணிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற 21 வயதான ஹசிக் ஹில்மி ரஸாலி, காயமின்றி உயிர் தப்பினார்.
இறந்த மற்றும் காயமடைந்த பயணிகள் குடும்ப உறுப்பினர்கள் என்று கண்காணிப்பாளர் அர்ஷாத் கூறினார். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தவறி விழுந்ததில், மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தீப்பிடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக அலோர் காஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.