சிற்றுண்டி விற்பனையாளர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு படுகாயம்!
57 வயதான சிற்றுண்டி விற்பனையாளர் திரு. வோ வெங் சாய், புக்கிட் பஞ்சாங் குடியிருப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து விழுந்த இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்.
தலையிலும் தோளிலும் கூர்மையான வலியை உணர்ந்த அவர், முகத்தில் ரத்தம் வடிய தரையில் சரிந்தார்.
தூணில் சாய்ந்தபடி இருந்தவருக்கு உதவ அவரது மனைவி அவசர ஊர்தியையும் காவல்துறையையும் அழைத்தார்.
கவனக்குறைவாக செயல்பட்டதற்காக 21 வயது இளைஞர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது, விசாரணைகள் தொடர்கின்றன.
வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (HIP) ஒரு பகுதியாக, மேற்கூரையில் பாதுகாப்பு தடுப்புகளை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
கூரை வடிகாலில் இருந்த ஓட்டை வழியாக இரும்புக் கம்பி கீழே விழுந்து திரு. வோவைப் பதம் பார்த்து விட்டது.
திரு. வோவின் மண்டை ஓடு உடைந்துள்ளது. நெற்றியில் ஏற்பட்ட ஆழமான காயத்திற்கு தையல் போடப்பட்டுள்ளது. உடைந்த தோள்பட்டைக்கு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த மருத்துவமனை செலவுகள் அனைத்தையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாக ஒப்பந்த நிறுவனம் அவரது குடும்பத்தினருக்கு உறுதியளித்துள்ளது.
விசாரணைக்கு HDB மற்றும் ஒப்பந்த நிறுவனம் ஆகிய இரண்டும் காவல்துறையுடன் ஒத்துழைக்கிறார்கள்.
இதுபோன்ற திட்டங்கள் நடக்கும் போது தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அப்பகுதி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
the image the straits times