2024-ல் ஜோகூருக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்!
கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 16 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஜோகூர் மாநிலத்தை பார்வையிட்டுள்ளனர். பெரும்பாலான பயணிகள் அண்டை நாடான சிங்கப்பூரிலிருந்து வருகின்றனர். இந்நிலையில், 2024-ஆம் ஆண்டில் 20 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை ஜோகூர் சுற்றுலாத்துறை கொண்டுள்ளது. ஜோகூர் பாரு சென்ட்ரல் பிசினஸ் டிஸ்ட்ரிக்ட் பகுதியில் பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் (பிப்ரவரி 25) இத்தகவலை ஜோகூர் சுற்றுலாத்துறை இயக்குனர் ஷரில் நிஜாம் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.
ஜோகூரை வெறும் பொருட்கள் வாங்கும் இடமாக மட்டும் பார்க்காமல் முன்னணி சுற்றுலாத் தலமாக மாற்றும் நோக்கில், குறிப்பாக ஜோகூர் பாரு பகுதியின் கவர்ச்சியை அதிகரிக்க சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. தனித்துவமான சுற்றுலா திட்டங்களை உருவாக்கி மாநில வரலாற்றை ஆராயும் வாய்ப்பை வழங்க உள்ளனர்.
இந்த இலக்கை அடைய, தொடர்புடைய அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து, ஜோகூர் மிருகக்காட்சி சாலை, தேசியப் பூங்கா போன்ற சுற்றுலா மையங்களை மேம்படுத்த ஜோகூர் சுற்றுலாத்துறை முனைப்புக் காட்டி வருகிறது. மேலும், 2026-ம் ஆண்டு ‘ஜோகூர் வருகை ஆண்டு’ விழாவிற்கு தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல், விளையாட்டு, மருத்துவம், கல்வி, வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா, மற்றும் உணவு சுற்றுலா போன்ற பல்வேறு சுற்றுலா திட்டங்களை கண்காணித்து வருகின்றனர். மாநில சுற்றுலாத்துறையை முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஜி மேற்பார்வையிடும் நிலையில், அனைத்து முன்னேற்றங்களும் அவருக்கு அறிக்கையாகத் தரப்படும்.