சிங்கப்பூர் பள்ளிகளில் மாணவர்களின் சீருடைகள் வெப்பநிலைக்கு ஏற்ப மாற்றம்!
சிங்கப்பூரில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக சில பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு வழக்கமான சீருடைக்கு பதிலாக உடற்கல்வி சீருடை (PE attire) அணிய அனுமதி அளித்துள்ளன.
இம்மாற்றம் மாணவர்களுக்கு இந்த வெப்பத்தில் கூடுதல் வசதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புக்கிட் திமா தொடக்கப்பள்ளி மற்றும் லியன்ஹுவா தொடக்கப்பள்ளி போன்ற பள்ளிகள் ஏற்கனவே இந்த மாற்றத்தை செயல்படுத்தியுள்ளன.
அதன்படி மாணவர்கள் தற்போதைய சீதோஷ்ண நிலையில் லேசான, வியர்வையை உறிஞ்சும் ஆடைகளை அணியலாம்.
மேலும், மாணவர்களுக்கு நீர்ச்சத்துடன் இருப்பதன் முக்கியத்துவம் மற்றும் வெப்பத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை அடையாளம் காண்பது குறித்தும் பள்ளிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
மாற்றங்களில் ஒருமித்த கருத்து இல்லை
எல்லா பள்ளிகளும் இதுபோன்ற மாற்றங்களை மேற்கொள்ளவில்லை என்பது சில பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக வெயில் உச்சத்தில் இருக்கும் மதிய நேரங்களில், உடற்கல்வி சீருடைக்கு மேல் பினாஃபர் போன்ற பல அடுக்குகளை அணிவது குழந்தைகளுக்கு சிரமமாக இருப்பதாக சில பெற்றோர்கள் உணர்கின்றனர்.
ஒருசில உயர்நிலைப்பள்ளிகள் தங்கள் சீருடை விதிமுறைகளை தளர்த்தியிருந்தாலும், பல தொடக்கப்பள்ளிகளில் இதுபோன்ற மாற்றங்கள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சௌகரியம் மற்றும் நலன் கருதி பள்ளிகளும் இம்மாதிரியான மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
கல்வி அமைச்சகத்தின் நிலைப்பாடு
இது குறித்து விளக்கம் அளித்துள்ள சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் (MOE), வெப்பமான காலநிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிகளில் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
தேவைப்படும் சமயங்களில் மாணவர்கள் விளையாட்டு உடைகளை அல்லது பள்ளியின் சாதாரண டி-சர்ட் அணிய அனுமதிப்பது, வெயில் உச்சத்தில் இருக்கும் நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பது போன்றவை அந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
இந்த நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் கல்வி அமைச்சகமும், பள்ளிகளும் கவனமாக இருக்கும்.
மருத்துவ வல்லுநர்களின் அறிவுரை
வெப்பமான சூழ்நிலையில் கூடுதல் அடுக்கு ஆடைகளுடன் உடற்பயிற்சி செய்வது வெப்பத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
வெப்ப அழுத்தத்தின் அறிகுறிகள் லேசானது முதல் தீவிரமானது வரை இருக்கும், இதில் மிகவும் ஆபத்தானது வெப்ப மயக்கம் (heat stroke), இது உயிருக்கே கூட ஆபத்தை விளைவிக்கலாம்.
வெப்பமான நேரங்களில் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருப்பது, வெளியில் இருக்கும்போது நிழலில் இருப்பது, நீர்ச்சத்துடனேயே இருப்பது போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன.
ஏதேனும் உடல்நலக்குறைவு தென்பட்டால் உடனடியாக அந்த செயலை நிறுத்திவிடவும் அறிவுறுத்தப்படுகிறது.