சிங்கப்பூரில் இன்று முதல் நடப்புக்குவரும் சில மாற்றங்கள்..!
இன்று ஜூலை முதல் தேதி. சிங்கப்பூரில் இன்று முதல் நடப்புக்குவரும் சில மாற்றங்கள் பற்றித்தெரிந்துகொள்வோம்.
தேசிய சேவையின் 55ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், தேசிய சேவையாளர்களுக்கு நன்றிதெரிவிக்கும் நடவடிக்கைகளை SAFRA விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி 140க்கும் மேற்பட்ட வர்த்தகநிறுவனங்கள் தேசிய சேவையாளர்களுக்குச் சலுகைகள் வழங்குகின்றன.
ஓய்வு பெறும் வயதும் மறுவேலைவாய்ப்பு வயதும் இன்று முதல் உயர்த்தப்படும் என்று மனிதவள அமைச்சர்டான் சீ லெங் (Tan See Leng)தெரிவித்திருந்தார். இன்று முதல் ஓய்வுபெறும் வயது ஓராண்டு உயர்த்தப்பட்டு 63 ஆகும். SP குழுமத்தின் மின்சாரக் கட்டணங்கள், கடந்த காலாண்டைக் காட்டிலும் வரும் 3 மாதங்களுக்குச்சராசரியாக 8.1 விழுக்காடு உயர்த்தப்படும்.
தேசிய தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூரர்கள் இன்று முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தேசியக் கொடியை பறக்கவிடுவதற்கு ஊக்குவிக்கப்படுவர். சிங்கப்பூரில் இன்று முதல் மேலும் சில இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்படும்.
பொதுப் பூங்காக்கள், தோட்டங்கள், ABC எனும் சுறுசுறுப்பான, அழகிய, தூய்மையான நீர்நிலைகள், 10 பொழுதுபோக்கு கடற்கரைகள் ஆகியவை அந்த இடங்கள்.சிங்கப்பூரிலிருந்து இந்தோனேசியாவுக்கு செல்லும் சொகுசுக் கப்பல் பயணங்கள் இன்று முதல் தொடங்குகின்றன.
செயற்கை கருத்தறிப்பின் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதியருக்குப் புதிய இணை-நிதியுதவித்திட்டம் வழங்கப்படவிருக்கிறது. தகுதிபெறும் தம்பதியரில் ஒருவர் சிங்கப்பூரராக இருந்தால் அவர்கள் இன்று முதல் 75 விழுக்காடு வரைஇணைநிதியுதவி பெறுவர்.
சிங்கப்பூர்க் கழக வீடுகளில் வசிக்கும் சுமார் 950ஆயிரம் குடும்பங்களுக்குக் காலாண்டுக்கு ஒருமுறைவழங்கப்படும் பொருள் சேவை வரி பற்றுச்சீட்டுகளும் U Save கழிவுகளும் மாதம் வழங்கப்படும்.
முதல் கட்டமாக அது ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. இதற்கு அடுத்து அக்டோபர், அடுத்த ஆண்டு ஜனவரி ஆகிய மாதங்களிலும் கழிவுகளும், பற்றுச்சீட்டும்வழங்கப்படும்.
உடற்குறையுள்ளோர் பள்ளிக்குச் செல்லவும், மற்ற திட்டங்களில் கலந்துகொள்ளவும் வழங்கப்படும் போக்குவரத்து மானியம் உயர்த்தப்படவுள்ளது. இந்த மாதம் முதல் அத்திட்டத்துக்காக ஆண்டுக்கு 2 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும்.