மலேசியக் காரின் இருக்கையில் பதுக்கி வந்த 1,169 வேப்கள் வுட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்டது!
சிங்கப்பூரின் வுட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில், சட்டவிரோதமாக 1,169 இ-வேப்பரைசர்களை (வேப்கள்) நாட்டிற்குள் கடத்தி வர நடந்த ஒரு பெரிய முயற்சி அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரின் பின் இருக்கையை மாற்றி அமைத்து, அதற்குள் இந்த வேப்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு, தற்போது சுகாதார அறிவியல் ஆணையத்தின் (HSA) வசம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்குள் வேப்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், அனைத்து எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் அதிகாரிகள் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சில நாட்களுக்கு முன்புதான், துவாஸ் சோதனைச் சாவடியில் 18,400-க்கும் மேற்பட்ட வேப்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களுடன் வந்த ஒரு லாரி பிடிபட்டது. இதுவரை பிடிபட்டதிலேயே இதுதான் மிகப்பெரிய கடத்தல் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கடுமையான சட்டங்கள்
சிங்கப்பூரில் வேப்களைப் பயன்படுத்துவது, வைத்திருப்பது அல்லது வாங்குவதற்கு எதிராக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய, கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கலந்த வேப்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.