கிளமெண்டியில் கார் மோட்டார் சைக்கிள் மோதல் 26 வயது பெண் காயம்!
ஜூலை 28 அன்று கிளமெண்டி நகர மையத்தில் உள்ள ஒரு காப்பிக் ஷாப் அருகே இரண்டு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்து தொடர்பாக, 83 வயது பெண் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு உதவி வருகிறார்.
இந்தச் சம்பவம், கிளமெண்டி அவென்யூ 3, புளோக் 449-க்கு அருகில் மாலை சுமார் 6.35 மணியளவில் நடந்துள்ளது.
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 26 வயது பெண் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டார்.
இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படங்களின்படி, இந்த விபத்து புளோக் 451 மற்றும் 449-க்கு இடையில், பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடத்திற்கு (zebra crossing) அருகே நடந்துள்ளது.
ஒரு புகைப்படத்தில் கார் ஒன்று பாதசாரிகள் கடக்கும் பாதையில், தவறான திசையை நோக்கியபடி குறுக்காக நிற்பதைக் காண முடிந்தது. சாலையோரத் தடுப்புகளுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து கிடந்ததையும், சம்பவ இடத்தில் பலர் கூடி நின்றதையும் காண முடிந்தது.
இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.