பால்டிமோரில் ஒரு சரக்கு கப்பல் பாலத்துடன் மோதியதில் விபத்து!
மார்ச் 26 அன்று பால்டிமோரில் அமைந்துள்ள நான்கு வழிச்சாலை பாலம் ஒன்றின் மீது ஒரு சரக்குக் கப்பல் மோதிய விபத்தில், பாலம் இடிந்து விழுந்து, வாகனங்களும், பயணிகளும் ஆற்றில் மூழ்கினர்.
மீட்புப் பணியாளர்கள் இருவரை உயிருடன் மீட்டுள்ள நிலையில், மேலும் ஆறு பேரைக் காணவில்லை. ‘டாலி’ எனப் பெயரிடப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கப்பல், துறைமுகத்தை விட்டுப் புறப்படும் போது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து மேரிலாந்து அதிகாரிகளுக்கு கப்பலின் மாலுமிகள் எச்சரித்த நிலையிலும், பாலத்தில் மோதி இடிந்து விழுந்துள்ளது. விசாரணையில் அமெரிக்க அதிகாரிகளுக்கு சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) உதவி வழங்க முன்வந்துள்ளது.
கப்பலில் இருந்த 22 மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர். மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் கப்பல் விபத்து நடந்த இடத்திலேயே நிலையாக நிற்கிறது.
“பெரும் விபத்து, பல அரசு அமைப்புகள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கெவின் கார்ட்ரைட் விவரித்துள்ளார்.
வாகனங்கள் மற்றும் சாலைகளை பராமரிக்கும் வாகனம் ஒன்றும் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்த விபத்து குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உதவிகளை உடனடியாக அனுமதிக்கும் வகையில் மேரிலாந்து கவர்னர் வெஸ் மூர் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.
image the straits times