பல்லடம் தோட்டத்து வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூர கொலை!
திருப்பூர் பல்லடம் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே வீட்டில் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமாத்தாள் (75), மற்றும் மகன் செந்தில்குமார் (46) கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளனர்.
செந்தில்குமார் தனது குடும்பத்துடன் கோவையில் வசித்து, ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். உறவினர் திருமணத்துக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், தாய்-தந்தையுடன் வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்றிரவு மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து, அவர்களை கொலை செய்துள்ளனர். நாய் குரைத்ததால் வெளியே வந்த தெய்வசிகாமணியை தாக்கி கொன்றனர் அதைத் தடுக்க முயன்ற அலமாத்தாளையும் செந்தில்குமாரையும் கொலை செய்துள்ளனர்.
இன்று காலை தொழிலாளி ஒருவரின் தகவலின் அடிப்படையில் அவிநாசிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் 8 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி கூறியதாவது, “இந்த கொலைகளை ஒரே நபர் செய்திருக்க வாய்ப்பு இல்லை. கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல கோணங்களில் விசாரணை நடக்கிறது. மாநில எல்லைகளில் வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெறுகின்றன,” என்று தெரிவித்தார்.