சட்ட விரோத மின்சார வேலியில் சிக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த உத்தம்கட்டா (22), பவித்ரச்சந்திரன் (25) ஆகிய 2 வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு அரசு மதுபான கடைக்கு சென்றனர்.
திரும்பி வந்து கொண்டிருந்த போது, உத்தம்கட்டா ரூபி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியை தவறுதலாக தொட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற பவித்ரச்சந்திரன் படுகாயம் அடைந்தார்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உத்தம்கட்டாவின் தந்தை ஆபிரகாம்கட்டா (45), தனது மகனைத் தேடி வயலுக்குச் சென்றார். துரதிஷ்டவசமாக அவரும் அதே மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். தந்தை மற்றும் மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த பவித்ரச்சந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை இடம்பெற்று வருகிறது.