புங்கோல் சாலை கார் விபத்தில் சிக்கிய 2 பேரின் இரத்தத்தில் எட்டோமைடேட் கண்டறியப்பட்டது!
சிங்கப்பூரின் புங்கோல் பகுதியில் நடந்த கோரமான கார் விபத்து ஒன்றில் சிக்கிய இருவரின் இரத்த மாதிரிகளில் எட்டோமிடேட் (Etomidate) என்ற சக்திவாய்ந்த மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) தெரிவித்துள்ளது.
இந்த விபத்து கடந்த மே 13 அன்று ஒரு காரும் பொதுப் பேருந்தும் மோதிக்கொண்டதில் ஏற்பட்டது. காரை ஓட்டிச் சென்ற 30 வயது மதிக்கத்தக்க நபர் உயிர் தப்பினார். ஆனால், அவருடன் பயணித்த 28 வயது பெண் பயணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்துக்குப் பிறகு, காவல்துறையினர் காரைச் சோதனையிட்டபோது, 42 எலக்ட்ரானிக் சிகரெட்டுகளையும் (e-vaporisers) 1,200-க்கும் மேற்பட்ட வேப் குப்பிகளையும் (vape pods) கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் குப்பிகளில் சிலவற்றில் எட்டோமிடேட் கலந்திருந்ததும் தெரியவந்துள்ளது. வேப்களில் எட்டோமிடேட்டைப் பயன்படுத்துவது தசைகளில் வலிப்பு, குழப்பம், வலிப்புத்தாக்கங்கள் மற்றும் போதை பழக்கம் போன்ற கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று HSA எச்சரித்துள்ளது. விரைவில் இந்த மருந்து சிங்கப்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்து பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது.
வேப்களை விற்பனை செய்வது, வாங்குவது அல்லது பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளனர்.
இந்த விதிகளை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதமோ அல்லது சிறைத் தண்டனையோ விதிக்கப்படலாம். விபத்து மற்றும் சட்டவிரோத வேப் பொருட்கள் தொடர்பாக ஓட்டுநர் தற்போது காவல்துறையினருக்கும் HSA-க்கும் விசாரணைக்கு உதவு வருகிறார்.