பாகிஸ்தானில் நிவாரணப் பணிக்குச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து 5 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், வெள்ளிக்கிழமை அன்று அரசுக்குச் சொந்தமான Mi-17 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த இந்த ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகள் உட்பட ஐந்து பேரும் உயிரிழந்தனர்.
மொஹமந்த் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்று கொண்டிருந்தபோது, பண்டியாலி என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஹெலிகாப்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் பெய்து வரும் பலத்த பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை குறைந்தது 312 பேர் உயிரிழந்துள்ளனர். 740 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துயரமான சூழ்நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்து மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
மாகாண அரசு சனிக்கிழமை ஒரு நாள் துக்க தினமாக அறிவித்துள்ளது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், உயிரிழந்த வீரர்களுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டின் வடக்குப் பகுதிகளில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அங்கு சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணிகளும், சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை, பருவமழை காரணமாக நாடு முழுவதும் 370 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.