ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் 20 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12:47 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 160 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் அப்போட்டாபாத் போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 4.3 முதல் 5.0 ரிக்டர் வரையிலான அளவில் பல தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டன. பூமிக்கு அடியில் 40 முதல் 140 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த பின்னதிர்வுகள் பதிவாகின. இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாடு, இந்திய மற்றும் யூரேசிய பூமித் தட்டுகள் சந்திக்கும் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடர், உலகில் அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயகரமான பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே, ஆப்கானிஸ்தான் அடிக்கடி இதுபோன்ற கோரமான நிலநடுக்கங்களை சந்தித்து வருகிறது.