சாங்கி விமான நிலையத்தில் தொடர் திருட்டு இந்திய ஆடவருக்கு 4 வாரம் சிறை!

0

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் மற்றும் ஜுவல் வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் இருந்து $5,000 வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள வாசனைத் திரவியங்கள், ஒப்பனைப் பொருட்கள் மற்றும் கைப்பைகளைத் திருடிய 38 வயது இந்திய தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்தத் திருட்டுச் சம்பவங்கள், அவர் அடுத்த விமானத்திற்காகக் காத்திருந்தபோது மே மாதம் 28ஆம் தேதி நடந்துள்ளன. எட்டு மணி நேரத்திற்குள் குறைந்தது 12 கடைகளில் அவர் பொருட்களைத் திருடியது சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

பின்னர், புது டெல்லிக்குத் திரும்பிச் செல்லும் வழியில் ஜூன் 1ஆம் தேதி அவர் மீண்டும் சிங்கப்பூர் வந்தபோது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டன. மேலும், அவரிடம் கணக்கில் வராத சுமார் $1,000 வெள்ளி மதிப்புள்ள கூடுதல் நகைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்களும் இருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.

இந்த வழக்கு செப்டம்பர் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அவர் தனது நான்கு திருட்டுக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

விசாரணையின்போது, அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மன உளைச்சல் மற்றும் மதுவின் தாக்கத்தால் இவ்வாறு செய்துவிட்டதாகவும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்றும், ஒவ்வொரு குற்றத்திற்கும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

Leave A Reply

Your email address will not be published.