PIE சாலையில்மோட்டார் சைக்கிள் ஓட்டியை மோதிவிட்டு தப்பியோடிய இளைஞர் கைது!
செப்டம்பர் 20 ஆம் தேதி மாலை, சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் PIE சாலையில் நடந்த விபத்து ஒன்றில், மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மது அல்லது போதைப்பொருள் பாவனையில் வாகனம் ஓட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. BKE வெளியேறும் சாலைக்கு முன்பாக நடந்த இந்த விபத்தில், அவரது காரும் 60 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரும் சிக்கினர்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார்.
மேலும், அந்த கார் ஓட்டுநரிடமிருந்து ‘வேப்’ (மின்னணு சிகரெட்) ஒன்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் சுகாதார அறிவியல் ஆணையத்தின் (Health Sciences Authority) கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
காரில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவில் (டாஷ்கேம்), அந்த வெள்ளை நிற கார் சாலையில் தாறுமாறாக பல தடங்களில் மாறி மாறி ஓடி, மோட்டார் சைக்கிள் மீது மோதுவதைக் காண முடிந்தது. மோதிய பிறகு, கார் சாலையின் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் சாலையில் உருண்டு விழுந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.