கரூரில் நடிகர் விஜய் பொதுக்கூட்டத்தில் பெரும் சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் உயிர் இழப்பு!
கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர்.
இந்த கோர சம்பவத்தில், 6 குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் உட்பட 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பத்துக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நடிகர் விஜய் விழா நடைபெறும் இடத்திற்கு தாமதமாகவே வந்து சேர்ந்தார். அவரால் மேடைக்கு அருகே செல்வதற்கே மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. அவர் பேசிக்கொண்டிருந்த போதே, அவருடைய வாகனத்தின் அருகே நின்றிருந்த தொண்டர்களில் சிலர் மயங்கி விழுந்ததால், கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன.
நிலைமை மேலும் மோசமாக, திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து ஓட முயற்சித்தபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டு இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த துயரச் சம்பவத்தை அடுத்து, திமுக அமைச்சர்கள் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. குழந்தைகள் உட்பட தங்கள் உறவுகளைப் பறிகொடுத்த குடும்பத்தினர் கதறி அழுவது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.