சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் மாடியிலிருந்து விழுந்து 56வயது பெண் உயிரிழப்பு!
சிங்கப்பூர் – சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஜூவல் சாங்கி விமான நிலையத்தில், இன்று (அக்டோபர் 16) வியாழக்கிழமை, 56 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மாடியிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மதியம் சுமார் 1:55 மணியளவில், ஏர்போர்ட் Boulevard-இல் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. உடனடியாக, காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அங்கு மயங்கிய நிலையில் கிடந்த அப்பெண்ணை மீட்டு, சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டிக்டாக்கில் பரவிய ஒரு காணொளியில், சிலர் சுற்றி நிற்க, ஒருவர் அப்பெண்ணுக்கு முதலுதவி (CPR) செய்வதைக் காண முடிந்தது. சிறிது நேரத்தில், வணிக வளாக ஊழியர்கள் அந்த இடத்தை சுற்றித் தடுப்புகளை அமைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஜூவல் சாங்கி விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட அவர், அதிகாரிகளின் விசாரணைக்குத் நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறினார்.