மடிக்கக்கூடிய கத்தியால் கணவரைக் குத்திய மனைவி! சிங்கப்பூர் பெண்ணுக்கு 31 மாத சிறைத்தண்டனை.
சிங்கப்பூர்: தனது கணவரைக் கத்தியால் குத்திய குற்றத்திற்காக 52 வயது பெண்மணிக்கு 31 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பானியா ஷாப் என்ற அந்தப் பெண், ஆங் மோ கியோவில் உள்ள ஒரு புளோக்கின் கீழ் (void deck) நடந்த சண்டையின்போது தனது கணவர் முகமது அலி சாபானைக் குத்தினார்.
யோசிக்காமல் செய்த செயலால் மரணம் விளைவித்தது, குற்றத்திற்குப் பிறகு கத்தியை மறைத்தது, வங்கி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கணக்குகளைக் கையளித்தது என தன் மீதான ஏழு குற்றச்சாட்டுகளையும் அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
சம்பவத்தன்று இரவு, இந்தத் தம்பதியினர் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், பேத்தியைப் பார்த்துக்கொள்ளாமல் கணவர் தூங்குவதைக் கண்டு பானியா கோபமடைந்தார். மீண்டும் அவர்கள் புளோக்கின் கீழ்த்தளத்திற்குச் சென்றபோது, பானியா தனது சகோதரர் மற்றும் அவரது நண்பர்களைப் பார்த்து சத்தம்போடத் தொடங்கினார். கணவர் அவரைச் சமாதானப்படுத்த முயன்றபோது, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அந்த சண்டையின்போது போது, பானியாவின் சாவிக்கொத்தில் இருந்த மடிக்கக்கூடிய கத்தி திறந்து, எதிர்பாராதவிதமாக கணவரின் தொடையில் குத்திவிட்டது. இதில், அவருக்குப் பலத்த இரத்தப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கணவரைக் குத்திய பிறகு, பானியா அந்த இடத்திலிருந்து சென்று கத்தியைக் கழுவி மறைத்து வைத்துள்ளார். பின்னர் மீண்டும் சம்பவ இடத்திற்குத் திரும்பி வந்து, உதவிக்கு யாரையும் அழைக்க வேண்டாம் என அங்கிருந்தவர்களைப் பார்த்து கத்தியுள்ளார். பானியாவின் செயல்கள் வரம்பு மீறிய வன்முறையையும், அவர் யோசிக்காமல் முடிவெடுத்ததையும் காட்டுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
இது மனித உயிரை மதிக்காத ஒரு பொறுப்பற்ற செயல் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. மறுநாள் கைது செய்யப்பட்ட பானியாவுக்கு, தொடர்புடைய அனைத்து குற்றங்களுக்கும் சேர்த்து இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.