சிங்கப்பூரில் வீடமைப்பு கட்டிடத்தின் கீழ் ஓய்வெடுத்த தொழிலாளர்களை திட்டிய நபர் இணையத்தில் கடும் கண்டனம்!

0

சிங்கப்பூரில் ஒருவர் செய்த செயல், இப்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டோ பாயோ (Toa Payoh) பகுதியில் உள்ள ஒரு வீடமைப்பு கட்டிடத்தின் கீழ் சில வெளிநாட்டு ஊழியர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை அந்த நபர் கடுமையாகத் திட்டி, அதைத் தானே வீடியோ எடுத்து TikTok-இல் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “ஏன் இங்கே தூங்கிக்கொண்டும், சிகரெட் பிடித்துக்கொண்டும் இருக்கிறீர்கள்? இது ஒன்றும் உங்க தாத்தா வீடு இல்லை” என்று அந்த ஊழியர்களிடம் அவர் கோபமாகப் பேசுவது பதிவாகியுள்ளது. அக்டோபர் 16 ஆம் தேதி எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், பல தொழிலாளர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில், பாய் விரித்து படுத்திருப்பதும், சிலர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதும் தெரிகிறது.

தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் குவியும் குரல்கள்
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும், அந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். அந்த நபரின் செயலைக் கடுமையாகக் கண்டித்த அவர்கள், “அந்தத் தொழிலாளர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை” என்று கருத்து தெரிவித்தனர்.

“நாள் முழுவதும் கடும் வெயிலில் வேலை செய்பவர்கள், சற்று ஓய்வெடுக்கத் தான் நினைப்பார்கள். அந்த நபர் இவ்வளவு கோபப்படாமல், கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்திருக்க வேண்டும்” என்று பலர் கூறினர்.

ஒருவர், “அவர்கள் அங்கே ஓய்வெடுப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் தங்குவதற்கு நீங்களே காசு கொடுத்து வேறு இடம் பாருங்கள்” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

“அவர்களுக்கு மரியாதை கொடுங்கள்” – அமைப்புகள் வேண்டுகோள்
வெளிநாட்டு ஊழியர்களின் நலனுக்காகச் செயல்படும் பல அமைப்புகளும் இந்தச் செயலைக் கண்டித்துள்ளன. மேலும், பொது மக்கள் அவர்களிடம் இன்னும் கொஞ்சம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவை கேட்டுக் கொண்டன.

‘ItsRainingRaincoats’ என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவனர் தீபா சுவாமிநாதன், “அந்த நபரின் செயல் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது” என்று கூறினார். “சிங்கப்பூரின் வீடுகளையும் கட்டிடங்களையும் கட்டுபவர்கள் இந்தத் தொழிலாளர்கள்தான். அவர்களுக்கு நாம் உரிய மரியாதை கொடுக்க வேண்டும்” என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார்.

மேலும் அவர், “நாள் முழுவதும் சுடும் வெயிலில் அவர்கள் உழைக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு நிச்சயமாக ஓய்வு தேவை. அவர்களை நாம் விமர்சனம் செய்வதை விடுத்து, கருணையுடன் நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.