யீஷூனில் 15வது மாடி வீட்டில்தீ விபத்து 10 பேர் வெளியேற்றப்பட்டனர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!
சிங்கப்பூர் யீஷூனில் அக்டோபர் 28, மாலை ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
யீஷூன் வீதி 22, பிளாக் 269B-ல் உள்ள 15வது மாடி வீட்டில், இரவு சுமார் 7.10 மணியளவில் இந்தத் தீ விபத்து தொடங்கியுள்ளது.
தகவல் அறிந்து, சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினர் (SCDF) உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். வீட்டின் ஹாலில் (Hall) இருந்த ஒரு மெத்தையில் மட்டும் தீ பற்றியிருந்தது தெரியவந்தது.
மேலும், தீ விபத்தின் போது கழிவறையில் சிக்கியிருந்த ஒருவரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அவருக்கு புகை மூட்டம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர் சுயநினைவுடன் இருந்த நிலையில், சிகிச்சைக்காக கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக, அந்த பிளாக்கில் வசித்த சுமார் 10 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
வீட்டின் ஹாலில் பற்றவைக்கப்பட்ட ஏதோவொரு பொருளிலிருந்தே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று SCDF தெரிவித்துள்ளது.
சிகரெட், மெழுகுவர்த்தி, ஊதுவத்தி போன்ற எரியும் பொருட்களைக் கவனிக்காமல் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.