சிங்கப்பூரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தை அடைந்த சாதனை!

0

ஐந்து வயதே ஆன சிறுவன் அபியான் இம்தியாஸ் இர்கிஸ் மற்றும் அவரது 41 வயது தந்தை திரு. ஜிக்ரி அலி ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தை கடந்த ஏப்ரல் 29 அன்று அடைந்தனர்.

அதுவும் திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் முன்னதாகவே! இவர்கள் இதற்கென ஆறு மாதங்கள் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டனர். ரமலான் மாதத்திலும் கூட தங்கள் பயிற்சியை நிறுத்தவில்லை.

தங்களது இந்த சாதனைப் பயணத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். சிங்கப்பூர் கொடியுடன் அடிவார முகாமில் நிற்கும் இவர்களின் புகைப்படம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

சிங்கப்பூரில் இந்தச் சாதனையை நிகழ்த்திய இளையவர் என்ற பெருமையை அபியான் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இதே சாதனையை ஆறு வயது சிறுவன் நிகழ்த்தியிருந்தார்.

அந்த சாதனையை முறியடித்துள்ளார் சிறுவன் அபியான். இவரது தந்தை திரு. ஜிக்ரி அலி இன்னொரு இளம் மலையேறியின் சாதனையால் ஈர்க்கப்பட்டார். அபியானின் மீதிருந்த நம்பிக்கையும், அவருடன் இணைந்து மலையேற்ற பயணங்களை மேற்கொண்ட அனுபவமும், இந்த சாதனையை முயற்சிக்க தூண்டுகோலாக இருந்தன.

கடந்த நவம்பர் மாதம் வெறும் 4 கி.மீ. நடைப்பயிற்சியுடன் தொடங்கியது இவர்களின் பயிற்சி. படிப்படியாக கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டனர். சீனாவில் சில மலைப்பாங்கான பகுதிகளில் மலையேற்றப் பயிற்சியும் மேற்கொண்டனர்.

அபியானின் அம்மா திருமதி. வார் வார் லுவின் டன், தன் மகனின் வளர்ச்சியையும் உறுதியையும் கண்டு மிகுந்த பெருமிதம் அடைந்துள்ளார். விடாமுயற்சியும் நம்பிக்கையுமே இச்சாதனைக்கு காரணம் என்கிறார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.