சிங்கப்பூர் கிங் ஆல்பர்ட் பார்க் வீட்டில் S$4.34 மில்லியன் கொள்ளை மலேசிய கொள்ளையர்கள் கைது
கடந்த ஏப்ரல் 18, 2024 அன்று சிங்கப்பூரின் கிங் ஆல்பர்ட் பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டைக் கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 28 மற்றும் 32 வயதுடைய இரு மலேசியர்கள், மலேசியாவில் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 30 அன்று சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த கொள்ளையர்கள் குழுவில் நான்குக்கும் மேற்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்கள், அந்த வீட்டிலிருந்து ரொக்கம், கிரிப்டோகரன்சிகள் மற்றும் சொகுசு கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை S$4.34 மில்லியன் மதிப்புள்ளவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 25 முதல் 45 வயதுடைய 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 18, 2024 அன்று இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் கிளிமெண்டி காவல் பிரிவு போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையின் மூலம் குற்றவாளிகளை கண்டறிந்தனர்.
குற்றம் செய்துவிட்டு மலேசியாவுக்குத் தப்பியோடிய நிலையில், மலேசியாவின் அரச காவல் படையின் ஒத்துழைப்புடன் ஏப்ரல் 27 மற்றும் 28 தேதிகளில் அந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஏப்ரல் 30 அன்று சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மற்ற சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க மலேசியாவுடன் இணைந்து சிங்கப்பூர் காவல்துறை விசாரணையைத் தொடர்கிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் மீது மே 2ஆம் தேதி கும்பலாக ஆயுதங்களுடன் கொள்ளையடித்ததற்காக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
குற்றப் புலனாய்வுத் துறையின் துணை இயக்குநரும், துணை காவல் ஆணையருமான ஹெங் சி யாங், மலேசியாவின் அரச காவல் படைக்கு தனது நன்றியை தெரிவித்ததுடன், குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பிச் சென்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்த சிங்கப்பூர் காவல்துறை உறுதியாக இருப்பதை வலியுறுத்தினார்.