ரெட்ஹில் HDB பிளாக் 68-ல் தீ விபத்து 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சிங்கப்பூர்: ரெட்ஹில் பகுதியில் உள்ள HDB அடுக்குமாடி வீடு ஒன்றில் இன்று (ஆகஸ்ட் 28) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, நான்கு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ரெட்ஹில் குளோஸ், பிளாக் 68-ல் அதிகாலை சுமார் 1.15 மணியளவில் இந்தத் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர்.
தீ விபத்தின்போது படுக்கையறையில் சிக்கியிருந்த மூன்று பேர் மீட்கப்பட்டனர். புகை மற்றும் மூச்சுத்திணறல், சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டதால், அவர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், வேறு ஒரு மாடியில் வசித்த மற்றொருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாதுகாப்பு நடவடிக்கையாக, அந்த பிளாக்கில் வசித்த சுமார் 50 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் என்ன?
வீட்டின் வரவேற்பறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) பொதுமக்களுக்கு சில முக்கியப் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளது:
ஒரே நேரத்தில் பல மின்சாதனங்களை ஒரே பிளக் பாயின்ட்டில் இணைப்பதைத் தவிர்க்கவும்.
வீட்டில் உள்ள வயர்களை அவ்வப்போது சரிபார்க்கவும்.
சேதமடைந்த வயர்கள் அல்லது கேபிள்களை உடனடியாக மாற்றிவிடவும்.
செல்போன் போன்ற சாதனங்களை நீண்ட நேரம், குறிப்பாக இரவு முழுவதும் சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும்.