காது குத்துவதற்காக மயக்க ஊசி போடப்பட்ட 6 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம்!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹங்கலா கிராமத்தில், ஆனந்த்-சுபா தம்பதியரின் 6 மாத குழந்தைக்கு காது குத்தும் விழா நடத்த திட்டமிட்டனர்.
குழந்தை வலியை உணராமல் இருக்க மயக்க மருந்து (அனஸ்தீசியா) ஊசி போட முடிவு செய்தனர். பொம்மலாபுரா அரசு மருத்துவமனை டாக்டர் நாகராஜ், இரண்டு காதுகளிலும் மயக்க மருந்து செலுத்தினார், இதற்காக ரூபா 200 கட்டணம் வசூலித்தார்.
அதிக வீரியம் உள்ள மருந்து காரணமாக, குழந்தையின் வாயில் இருந்து நுரை வந்தது, உடல் மயங்கியது. பெற்றோர் அவசரமாக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் பெற்றோர் டாக்டரை மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டி, அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரினர்.
இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
சுகாதார அதிகாரிகள், மரணத்திற்கான காரணம் உறுதியாக நிரூபிக்கப்பட்டால், டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.