கனரக வாகன வரிசையில் மாற்றப்பட்டு பணம் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
சமீபத்தில், சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளில், ஜோகூர் மாநிலத்தில் உள்ள சோதனைச் சாவடியில் சிங்கப்பூர் வாகனங்களில் பயணித்தவர்களிடம் பணம் பறிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இச்சம்பவம் மார்ச் 10 அன்று நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனைச் சாவடியில், சிங்கப்பூர் வாகன ஓட்டிகள் கனரக வாகனங்கள் செல்லும் வரிசைக்கு மாற்றப்பட்டு, அதிகாரிகளால் பணம் கேட்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மலேசியா சாலைப் பயணங்கள் குறித்த ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் ஐரீன் தியோ என்ற பயணி தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஒரு இடத்திற்கு அவர்களை வரவழைத்து, ஆவணங்களைக் காட்டச் சொல்லிவிட்டு, மீண்டும் சரியான வழித்தடத்திற்குச் செல்ல 600 ரிங்கிட் (S$171) தரவேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறியுள்ளார். மற்றொரு பயனரான சேஜ், தனது வாகனத்தின் டேஷ் கேமராவில் பதிவான காட்சிகளை பகிர்ந்துள்ளார். அதில் அதிகாரிகள் வாகன ஓட்டிகளிடம் பேசுவது தெரிகிறது.
இந்தக் காட்சிகள் பற்றி அறிந்து, சம்பந்தப்பட்ட நபர்களைத் தொடர்புகொள்ள முயற்சிப்பதாக ஜோகூர் காவல்துறை ஆணையர் எம். குமார் தெரிவித்துள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் லஞ்சத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை அவர் வலியுறுத்தினார்.