யீனோஸ் தொழிற்பேட்டையில் பெரும் தீ விபத்து 60 தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில்!
சிங்கப்பூரில் யீனோஸ் (Eunos) பகுதியில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில், நவம்பர் 1ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. மாலை சுமார் 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ, 1079 யீனோஸ் அவென்யூ 7-ல் உள்ள மூன்று பணிமனைக்குள் விரைவாகப் பரவி, அருகிலுள்ள மற்றொரு பணிமனையின் கூரையையும் சேதப்படுத்தியது.
சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 16 அவசர வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. அவர்கள் தீயை இரவு 8.30 மணிக்குள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டிடத்தின் அமைப்பு பாதிக்கப்பட்டதால், தீயணைப்பு இயந்திரங்களின் உதவியுடன் உள்ளே எரிந்துகொண்டிருந்த சிறு தீப்பொறிகளையும் அணைத்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீசார் பாதுகாப்பு வட்டத்தை அமைத்தனர். மேலும், உள்துறை அமைச்சகம் பொதுமக்கள் அந்தப் பகுதியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியது. அருகிலிருந்த தொழிலாளர்கள், அடர்ந்த புகை வானில் பரவியதை அச்சத்துடன் கவனித்தனர்.