இளையவர்களில் அதிகரிக்கும் தீவிரவாதப் பாதிப்பு அமைச்சர் சண்முகம் வலியுறுத்தல்!
உள்துறை மற்றும் சட்ட அமைச்சரான கே. சண்முகம், சிங்கப்பூரில் தன்னைத் தீவிரவாதத்துக்கு ஈர்த்துக்கொள்ளும் இளையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப்பற்றி கவலை தெரிவித்தார்.
பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் தங்கள் குழந்தைகளில் சந்தேகத்திற்கிடமான எந்த அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
உள்நாட்டு பாதுகாப்புத் துறை (ISD) தெரிவித்ததுபடி, 15 வயது சிறுமி ஒருவருக்கு தீவிரவாத பாதிப்பு காரணமாக கட்டுப்பாட்டு ஆணை (Restriction Order) பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 17 வயது சிறுவன் ஒருவர் ஐந்து உள்ளூர் மசூதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்
ஜூரோங் வெஸ்டில் உள்ள மஸ்ஜித் மாரூப் மசூதியில் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், இந்த இரண்டு இளையவர்களும் இணையத்தில் தீவிரவாதப் பொருட்களை பார்த்து தாக்கத்திற்குள்ளானதை விளக்கினார்.
மேலும், அவர்கள் இந்த ஆபத்தான எண்ணங்களை தங்கள் குடும்பத்தினருடன் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டனர். இதனை தடுக்கும் ஒரே வழி ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து தடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மக்கள் யாரேனும் தீவிரவாத சம்பந்தமான பதிவுகளை பார்த்தாலோ, அல்லது அதுபற்றி பேசினாலோ உடனடியாக தகவல் தர வேண்டும்.
அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு அவர்களுக்கு சிகிச்சை, மறுவாழ்வு உதவிகளை அளிக்க முடியும். பலர் இவ்வாறு உதவிபெற்று மீண்டும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் சண்முகம் சிங்கப்பூர் தீவிரவாத கருத்துக்களுக்கு ஒரு போதும் இடமளிக்காது என்பதை உறுதியாக தெரிவித்தார். ஆபத்து உருவாகும் முன்பே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில் தீவிரவாதிகள் ஒருமுறை வெற்றி பெற்றாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுவர்.
எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தீவிரவாத பாதிப்பை தடுக்க மக்களும், சமூகமும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.