நடுவானில் கோளாறு பாதியிலேயே திரும்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாதியிலேயே திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
401 பயணிகள் மற்றும் 28 விமான ஊழியர்களுடன் பயணித்த அந்த ஏர்பஸ் A380 ரக விமானம், செப்டம்பர் 26 அன்று அதிகாலையில் மீண்டும் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த அனைவரும் எந்தப் பிரச்சினையும் இன்றிப் பத்திரமாக இறங்கினர்.
திட்டமிட்டபடி, அன்று மாலை 4.05 மணிக்கு சிங்கப்பூரை அடைய வேண்டிய அந்த விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது. விமானத்தின் பயண வழியைக் கண்காணித்ததில், அது பல மணி நேரம் பயணித்து காஸ்பியன் கடல் அருகே சென்ற பிறகு, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியது தெரிய வந்துள்ளது.
பயணிகளுக்கு உணவு, ஹோட்டலில் தங்குவதற்கான வசதி மற்றும் மாற்று விமானங்களுக்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. இந்தச் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், “பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பே எங்களுக்கு எப்போதும் முதன்மையானது” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளது.