தொழில்நுட்பக் கோளாறு சிங்கப்பூர் ஃப்ளையர் ராட்டினச் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!
சிங்கப்பூர் ஃப்ளையரில் வழக்கமான பராமரிப்புப் பணிகளின்போது ஒரு தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் ராட்டினச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என்று அதன் நிர்வாகம் கூறியுள்ளது. எனினும், கோளாறு குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ராட்டினச் சேவை நிறுத்தப்பட்டிருந்தாலும், ஃப்ளையர் வளாகத்தில் உள்ள கடைகளும் உணவகங்களும் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கட்டிட, ஆணையத்தின் உதவியுடன் கோளாறைச் சரிசெய்யும் பணிகளும், உரிய சோதனைகளும் நடைபெற்று வருகின்றன.
இதனால் பார்வையாளர்களுக்கும் வர்த்தகப் பங்காளிகளுக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்கள், மின்னஞ்சல் அல்லது தொலைப்பேசி வழியாக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளலாம் என்றும், இது குறித்த புதிய தகவல்கள் சிங்கப்பூர் ஃப்ளையரின் இணையத்தளத்திலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.