சிங்கப்பூரில் முதலீட்டில் ஏமாந்தவர்களை மேலும் ஏமாற்றிய நபர்!
ஏற்கனவே முந்தைய முதலீடுகளில் பெரும் நஷ்டத்தை சந்தித்த ஆறு பேரை, அவர்களது பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி, சிங்கப்பூரில் ஒருவர் ஏமாற்றியுள்ளார்.
பல்வேறு போலி வாக்குறுதிகளின் கீழ் ‘கட்டணங்கள்’ வசூலித்து, அந்த நபர் 2.85 மில்லியன் டாலருக்கும் அதிகமாக மோசடி செய்திருக்கிறார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட முரளிதரன் முஹுந்தன் மீது 18 மோசடி வழக்குகள் உள்ளன, மேலும் பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.
ஓய்வு பெற்றவர்களாக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை முரளிதரன் சம்பாதித்து, அவர்களை தன் அலுவலகத்திற்கு நேரில் அழைத்திருக்கிறார்.
இழந்த முதலீடுகளை மீட்டுத் தரும் ஒரு அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பொய்யுரைத்து, அதற்கான கட்டணம், கமிஷன் போன்றவற்றைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அவர் அந்த பணத்தைக் கொண்டு சூதாட்டக் கடன்கள் மற்றும் சட்டவிரோத கடன்களை அடைத்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எட்டு முதல் ஒன்பது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என வழக்குத் தொடுத்துள்ள தரப்பு கோருகிறது.
இந்த மோசடி நீண்ட காலமாக நடந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முரளிதரனின் குடும்ப சூழலை முன்னிறுத்தி குறைந்த தண்டனை கேட்டு அவரது வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். மே 3ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.