தம்பினீஸில் தொழிற்சாலை, பள்ளியில் நடந்த திருட்டு – ஒருவர் கைது!

0

தம்பினீஸ் பகுதியில் கடந்த மே 21 ஆம் தேதி தொழிற்சாலை மற்றும் பள்ளியில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 36 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தம்பினீஸ் நார்த் டிரைவ் 4 இல் அமைந்துள்ள தொழிற்சாலையில் காலை 9 மணியளவில் முதல் திருட்டு சம்பவம் அரங்கேற, அதே நாள் மாலை 5:45 மணியளவில் தம்பினீஸ் அவென்யூ 1 இல் உள்ள பள்ளியிலும் இரண்டு சட்டைகள் மற்றும் பையுடன் மொத்தம் 70 டாலர் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டன.

இரு சம்பவங்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பெடோக் காவல்துறையினர், குற்றவாளியை அடையாளம் கண்டு ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்தனர். விசாரணையில் இரண்டு இடங்களிலும் திருடியது ஒரே நபர்தான் என்பது தெரியவந்தது.

திருட்டு குற்றத்திற்காக குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

இதுபோன்ற திருட்டு சம்பவங்களை தடுக்க, கதவுகளையும், ஜன்னல்களையும் பூட்டி வைப்பது, வீட்டில் அதிக பணம் வைத்திருப்பதை தவிர்ப்பது, அலாரங்கள் மற்றும் கேமராக்களை பொருத்துவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை அறிவுறுத்துகிறது.

Leave A Reply

Your email address will not be published.