சிங்கப்பூர் Toa Payoh வில் நடந்த துயர சம்பவம் வீட்டுப் பணிப்பெண் விழுந்து உயிரிழப்பு!
செப்டம்பர் 25 ஆம் தேதி காலை, சிங்கப்பூரின் டோ பாயோ பகுதியில் உள்ள ஒரு HDB அடுக்குமாடி குடியிருப்புக்குக் கீழே 39 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் ஒரு வீட்டுப் பணிப்பெண் என்றும், கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதிதான், அதாவது சில நாட்களுக்கு முன்புதான் வேலைக்குச் சேர்ந்தவர் என்றும் நம்பப்படுகிறது.
இது குறித்து காவல்துறைக்கு காலை 8 மணியளவில் டோ பாயோ, லோரோங் 7, பிளாக் 9-ல் இருந்து உதவி கோரி அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர், அப்பெண் ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்றும், ஜன்னல்களை சுத்தம் செய்யும்போது அவர் தவறி விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அப்பெண்ணின் முதலாளி (வயது 50), மனிதவளத் துறையில் பணிபுரிந்து வருகிறார். அவர் கூறுகையில், இச்சம்பவம் நடந்தபோது தங்கள் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார். காவல்துறையினரின் விசாரணை இடம்பெறுகின்றது.