புகிட் மேரா HDB தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு 60பேர் அவசர வெளியேற்றம்!
புதன்கிழமை (ஆகஸ்ட் 13) அன்று புகிட் மேரா, எச்டிபி (HDB) அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மாலை சுமார் 4 மணியளவில் ஜாலான் புகிட் மேரா, பிளாக் 106-ல் உள்ள நான்காவது மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, வீட்டின் வரவேற்பறை மற்றும் படுக்கையறை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததைக் கண்டனர்.
34 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் சமையலறையில் மயங்கிய நிலையில் மீட்னர்.
உடனடியாக அவர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அருகிலுள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த மேலும் இரண்டு பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, மற்றவருக்கு தீ விபத்தினால் ஏற்பட்ட புகை மூட்டத்தை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சுமார் 60 பேர் வெளியேற்றப்பட்டனர்.
தண்ணீர் பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.